அதிகாரத்தில் பங்கு இதுதானா, அமைச்சரே?: அண்ணல் அம்பேத்கர் உதவித்தொகை கிடைக்காமல் மலேசிய ஆய்வு மாணவர் பாரதிதாசன் கண்ணீர் பதிவு!

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை கிடைக்காமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மலேசிய ஆய்வு மாணவர் பாரதிதாசன், மீண்டும் ஒரு கண்ணீர்மல்கிய காணொளி பதிவை வெளியிட்டுத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

“எல்லாத் தகவலையும் கொடுத்த பிறகும், மீண்டும் முதலில் இருந்து தரவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; என் மீது பேராசிரியர்கள் வைத்திருந்த நம்பகத்தன்மையை நீங்கள் நாசமாக்கிவிட்டீர்கள்” எனத் துறைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சகத்தின் மீதான தனது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

உதவித்தொகை தாமதத்தால் கல்லூரியிலிருந்து தன்னை நீக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தனது ஆய்வைக்கூடச் சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறியுள்ள அவர், “உங்களிடம் இருக்கும் அதிகாரம் அனைத்தையும் என் மீது ‘TARGET’ செய்து என்னை ஒடுக்க நினைக்கிறீர்கள்” எனக் வேதனையுடன் சாடியுள்ளார்.

“ஏன் உனக்கு ஆய்வுப்படிப்பு… நீ அடிமையாகத்தானே இருந்தே…? நீ அப்படியே இரு!” என்று நேரடியாகச் சொல்லி விடுங்கள், மன உளைச்சலைத் தராதீர்கள் எனக் கூறிய அவர், ரோகித் வெமுலாவிற்கு ஒன்றிய அமைச்சகம் என்ன செய்ததோ அதைத்தான் இன்று உங்களின் அமைச்சகமும் எனக்குச் செய்கிறது எனக் குறிப்பிட்டார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கக் கொண்டுவரப்பட்ட இந்த உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் நிலவும் நிர்வாகத் தாமதங்கள் மற்றும் அலட்சியப்போக்கு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மாணவரின் இந்த அதிர்ச்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சகமும் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment