2027-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது போட்டிக்கான இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ நுழைவாக, இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவான இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘அந்தோனி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கயல் வின்சென்ட், டிஜே பானு, சுதர்சன் ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியான இத்திரைப்படம், ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் (Best International Feature Film) போட்டியிட உள்ளது.
ஈழத்து மனிதர்களின் வாழ்க்கைப் பின்னணி மற்றும் உணர்வுகளை ஆழமாகப் பதிவுசெய்துள்ள இத்திரைப்படத்திற்கு இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் பெருமளவில் ஆன்மாவைச் சேர்த்துள்ளதாகச் சினிமா விமர்சகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ஏற்கனவே பலரின் கவனத்தை ஈர்த்துள்ள ‘அந்தோனி’, தற்போது உலகத் திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் பந்தயத்தில் இலங்கை நாட்டின் சார்பில் அதிகாரப்பூர்வமாகப் களமிறங்குவது தமிழ் சினிமா வரலாற்றிலும், ஈழத்துத் தமிழ் திரையுலகப் பயணத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
உலகளவில் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இச்செய்தியைக் கொண்டாடி வருவதோடு, படம் ஆஸ்கார் மேடையில் முத்திரை பதிக்கத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.