கேரளாவில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம்: 5 பேர் பலி, 2 பேர் மாயம் – மக்களை வெளியேற்ற முதல்வர் சதீசன் உத்தரவு!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் 2 பேரைக் காணவில்லை என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது.

இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பெருமழை மற்றும் மண் சரிவால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கள நிலவரத்திற்கேற்ப ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான முகாம்களுக்கு உடனடியாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்குக் அம்மாநில முதலமைச்சர் சதீசன் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டப் மலைப் பகுதிகளில் மீட்புப் படையினரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறும் மாவட்ட நிருவாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் வழக்கத்திற்கு மாறாகத் தொடரும் இந்த இயற்கைச் சீற்றம் மற்றும் நிலச்சரிவு அசம்பாவிதங்கள் மீண்டும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளதுடன், அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை குறித்தும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும் கவலையையும் தூண்டியுள்ளது.

Leave a Comment