தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார்கள் விவகாரத்தில், திமுக அரசு மீது அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட வீரமணியைக் காப்பாற்றும் வேலையில் ஆளுங்கட்சியான திமுக தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே இது குறித்துப் புகார்கள் கொடுக்கப்பட்ட போதிலும், அப்போது முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அப்போதைய துறை அமைச்சராக இருந்த அன்றைய முதலமைச்சர் இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “திமுக ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் பிடிஆர்; அவர் தனது சொந்தத் தொகுதிப் பக்கமே செல்லாத காரணத்தினால்தான் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்” என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாகத் சாடினார்.
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாகத் தமிழக அரசியலில் தொடர்ச்சியாகப் புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் சூழலில், அமைச்சர் நிர்மல்குமாரின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.