இந்தியாவில் செல்போன் பயனர்கள் சந்தித்து வந்த மிக முக்கியப் புகார்களுள் ஒன்று, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் மாதாந்திர ரீசார்ஜ் பிளான்களின் கால அளவு 28 நாட்களாகக் குறைக்கப்பட்டு இருந்ததுதான். இதன் காரணமாகப் பயனர்கள் ஆண்டிற்கு 12 மாதங்களுக்குப் பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் – TRAI) தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுப் பயனர்களுக்குப் பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது.
டிராய் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, நாட்டில் செயல்படும் அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்களுக்குப் பதிலாகக் கட்டாயமாக முழுமையாக 30 நாட்கள் செல்லுபடியாகும் (validity) ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக, 12 முறை ரீசார்ஜ் செய்தாலே போதுமானது என்பதால் பயனர்களின் பணமும் மிச்சமாகும்.
மேலும், இன்டர்நெட் பயன்பாடு தேவையில்லாத சாதாரண போன் பயனர்கள் மற்றும் முதியவர்களைக் கருத்தில் கொண்டு, குறைந்த கட்டணத்தில் எஸ்.எம்.எஸ் (SMS) வசதி மட்டும் கொண்ட பிளான்களையும் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரே குறிப்பிட்ட தேதியில் தங்களது மாதாந்திர ரீசார்ஜைப் புதுப்பித்துக் கொள்ளும் வசதியையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என டிராய் தனது புதிய விதிமுறைகளில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுத் டிராய் எடுத்துள்ள இந்த நுகர்வோர் ஆதரவு நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள மொபைல் பயனர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.