பெங்களூரு நகரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதே AI கேமரா செய்துள்ள ஒரு விநோதமான தவறு, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் சிரிப்பலைகளையும் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், தனது ஸ்கூட்டரின் பின்புறம் ஒரு கிட்டார் பையைக் கட்டிக் கொண்டு பயணித்துள்ளார். ஆனால், வழியில் பொருத்தப்பட்டிருந்த நவீன AI கண்காணிப்புக் கேமரா, அந்த கிட்டாரைப் பின்னால் அமர்ந்திருக்கும் மனிதர் எனத் தவறாகக் கணித்துள்ளது. மேலும், அவர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கருதி, ரூ.500 அபராதம் விதித்து தானியங்கிச் செல்லானையும் (E-challan) அனுப்பியுள்ளது.
“ஹெல்மெட் அணியாத பின்சீட் பயணி” என்று குறிப்பிட்டு புகைப்படத்துடன் வந்த இந்த விநோதச் செல்லான் புகைப்படம், இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. “AI கேமராவுக்கு மனிதனுக்கும் கிட்டாருக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா?” என நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலான இந்தச் சம்பவம் தொடர்பாக, தற்போது பெங்களூரு போக்குவரத்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்பக் கோளாறால் தவறாக விதிக்கப்பட்ட இந்த அபராதத்தை ரத்து செய்யவும், AI அமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.