மத்திய மோட்டார் வாகன விதி திருத்த வரைவு அறிவிப்பில், ஓட்டுநர் உரிமம் (Driving License) பெறல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான பல்வேறு முக்கிய மாற்றங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, ஓட்டுநர் உரிமத்தில் இரத்த வகை மற்றும் செல்போன் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு அடையாளம் காணும் வகையில் தனித்தனி நிறங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, ஓட்டுநர் உரிம அட்டையில் தேசிய இனத்தைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் தேர்வுகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஆன்லைன் ஓட்டுநர் பயிற்சிக்கான கால அவகாசம் 7 நாட்களில் இருந்து 15 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் விகிதம் 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த விதிமுறைகள் வரைவு அறிவிப்பாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்ட பிறகு, 30 நாட்களுக்குப் பின்னரே இந்த இறுதி விதிகள் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.