காவிரி நீர் திறப்பிற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை மாநில தழுவிய பந்த் அறிவிப்பு!

தமிழகத்திற்குத் தினமும் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகாவில் நாளை (ஆகஸ்ட் 13) மாநில தழுவிய பந்த் போராட்டத்திற்கு கன்னட சலுவளி வாட்டாள் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்றும், தங்களது மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆணையத்தின் இந்த உத்தரவைக் கண்டித்தும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதைத் உடனடியாகத் தடுக்கக் கோரியும் இந்த முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந்த பந்த் போராட்டத்திற்குப் பல்வேறு கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கர்நாடகாவில் பேருந்துப் போக்குவரத்து, வணிக வளாகங்கள் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதுடன், இந்த பந்த் அறிவிப்பு இரு மாநில எல்லையோரப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment