நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி மீனவ கிராம பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பேனர் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் பொதுச்சுகாதாரத்தைப் பாதுகாக்கும் உயரிய நோக்கோடு, ஆகஸ்ட் 2 முதல் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டை மீறித் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருமணம் ஆனவர்கள் குடித்துவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்து ஊருக்குள் பிரச்சினை ஏற்படுத்தினால், அவர்களுக்கும் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்து நிர்வாகம் கெடுபிடி காட்டியுள்ளது.
“இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்” என்ற முழக்கத்துடன், மது அரக்கனிடம் இருந்து கிராம இளைஞர்களைக் காப்பாற்றவும் ஊர் அமைதியை நிலைநாட்டவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முயற்சிக்கு ஊர்ப் பொதுமக்களின் முழு ஆதரவையும் கிராமக் கட்டுப்பாடு கோரியுள்ளது. கிராம பஞ்சாயத்தின் இந்த முன்மாதிரியான நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.