தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நடக்கும் இடத்திற்கு 10 கி.மீ. சுற்றளவுக்குள் இருந்தால், ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் போய்ச் சேர வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய கடுமையான விதிகளை அறிவித்துள்ளது.
ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சென்று சேரத் தவறினால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுத்தப்படாமல், அவசர அழைப்பை ஏற்பதிலோ அல்லது ஆம்புலன்ஸ் புறப்படுவதிலோ தேவையின்றி தாமதம் ஏற்பட்டால் கூடுதல் அபராதமும் வசூலிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்கித் தவிக்கும் காயமடைந்தவர்களுக்கு ‘பொன்னான நேரத்திற்குள்’ (Golden Hour) அவசர மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்யவும், உயிர் இழப்புகளைக் கணிசமாகக் குறைக்கவும் நோக்க கொண்டே NHAI இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மீட்பு வாகனமும் மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைவது பலரின் உயிரைக் காப்பாற்றும் என்பதால், ஆம்புலன்ஸ் சேவை முகமைகள் இனி மிகுந்த எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த உத்தரவு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.