செயற்கை நுண்ணறிவுத் தளமான சேட் ஜிபிடி (ChatGPT) பயனாளர்களுக்குச் சந்தேகத்திற்குரிய மற்றும் ஆபத்தான தகவல்களை வழங்கியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளும் வழக்குவர்களும் எழுந்ததைத் தொடர்ந்து,ஓபன்ஏஐ (OpenAI)நிறுவனம் தற்போது 13 முதல் 17 வயதுக்குட்பட்ட டீனேஜர்களுக்காகப் பிரத்யேகப் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ChatGPT for Teens’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில், சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் ஏஐ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்புப் பதிப்பின் மூலம், வன்முறை, சுயகாயம், ஆபத்தான நடவடிக்கைகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்கள் போன்ற தீங்கிழைக்கக்கூடிய தகவல்களைப் பயனாளர்கள் பெறாமல் தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். மேலும், மாணவர்கள் தங்களின் வீட்டுப்பாடங்கள் மற்றும் பள்ளித் திட்டங்களுக்கு நேரடி விடைகளைப் பெற்று நகலெடுப்பதைத் தடுத்து, அவர்கள் சுயமாகச் சிந்தித்துப் படிப்பை அணுகும் வகையிலான ‘ஸ்டடி மோட்’ (Study Mode) வழிகாட்டல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் தங்களின் கணக்குகளைப் பிள்ளைகளின் கணக்குகளோடு இணைத்து, அவர்களின் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்தவும், ‘குயட் ஹவர்ஸ்’ (Quiet Hours) அமைக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் ஏஐ தொழில்நுட்பத்திற்கு அடிமையாவதைத் தடுத்து, கல்வி மற்றும் நேர்மறையான கற்றலுக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய ஓபன்ஏஐ எடுத்துள்ள இந்த முயற்சி பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.