“1 பைசாவுக்கு தங்க மோதிரம்?”: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட டெண்டரை வென்றது ஜோய் ஆலுக்காஸ்!

தமிழக அரசின் முன்னோடி நலத்திட்டங்களில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas) நிறுவனம் இம்மாபெரும் டெண்டரைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக ரூ.755 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்ற முன்னணி நகைக்கடை நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் அந்நிறுவனம் முன்வைத்த மிகக் குறைந்த தொகையே இதற்குக் காரணமாக அமைந்தது.

அதாவது, தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, சேதாரம் மற்றும் இதர நிர்வாகச் செலவுகள் அனைத்திற்கும் சேர்த்து வெறும் 1 பைசா மட்டுமே கட்டணமாகக் கோரி அந்நிறுவனம் இம்மாபெரும் டெண்டரைத் தனதாக்கியுள்ளது.

அரசுக்கு எந்தவிதக் கூடுதல் நிதியமைப்பும் ஏற்படாத வகையில், மிகக் குறைந்த செலவில் தரமான முறையில் மோதிரங்களைச் செய்து தர ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் மூலம் திட்டத்திற்கான செலவினங்கள் வெகுவாகக் குறையும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்த இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி வணிக நகர்வு தற்போது வணிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment