“அரசு மருத்துவமனைக்குச் செல்வார்களா?”: சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி!

தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர்களின் மருத்துவப் பயன்பாடு குறித்தும் காரசாரமான கேள்விகளை எழுப்பியது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் சூழலில், ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களின் அணுகுமுறை குறித்து அவர் சட்டமன்றத்தில் அடுக்கடுக்கான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், “இதுவரை எந்த அமைச்சராவது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா?” என்ற கேள்வியை எழுப்பி அவையைக் கவனிக்க வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாகச் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கோ அல்லது உள்நாட்டில் உள்ள முன்னணித் தனியார் மருத்துவமனைகளுக்கோ சிகிச்சை பெறச் சென்றுவிடுவதாகக் சுட்டிக்காட்டினார்.

ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவம் அளிப்பதாகக் கூறும் அரசு அமைப்பில், மக்கள் பிரதிநிதிகளே அரசு மருத்துவமனைகளைப் புறக்கணிக்கும் நிலையை உடனே மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசின் கட்டமைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமானால், முதலில் மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கலாச்சாரம் உருவாக வேண்டும் என்ற அவரது இந்தப் பேச்சு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment