தமிழ்நாட்டில் மின்சாரக் கொள்முதல் மற்றும் மின் விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
பொதுமக்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட அமைச்சர், “அதிக மின் தேவை இருக்கும் ‘பீக் ஹவர்’ (Peak Hour) தேவையைச் சமாளிப்பதற்காகவே 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் மின்வெட்டினால் அவதிப்படுவதைத் தடுப்பதற்காகத் தனிக் கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் மின்சாரக் கொள்முதலுக்கான செலவு குறித்துப் பேசிய அவர், “கேஸ் பவர் (Gas Power) மூலம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதன் காரணமாகத் நாளொன்றுக்கு தோராயமாக ரூ.5 முதல் 7 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது” என்று தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தில் எக்காரணத்தைக் கொண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் கொள்முதல் பணிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் தேவையைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதற்காகவே இந்தத் தற்காலிகக் கூடுதல் செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அமைச்சரின் இந்த நேரடி விளக்கம், மின் கொள்முதல் குறித்த தேவையில்லாத ஊகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.