கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட மலை யோர மற்றும் வனப் பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவலால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர். மனித-விலங்கு மோதலைத் தடுக்கும் வகையிலும், விவசாயப் பயிர்கள் மற்றும் பொதுமக்களின் உடைமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் எல்லைப் பகுதிகளில் பலமான பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே அப்பகுதி மக்களிடையே எழுப்பப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், விளவங்கோடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு மண்டலங்களில் யானைகள் புகாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்துத் தர வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜயிடம் நேரடியாக மனு அளித்துக் கோரிக்கை வைத்திருந்தார்.
தொகுதி மக்களின் இந்த அத்தியாவசியமான பிரச்சனையைக் கவனத்தில் கொண்ட முதலமைச்சர் விஜய், அம் மனுவைப் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தனது கோரிக்கையை ஏற்று, உடனடியாகத் தீர்வு கண்டதற்காக முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யானைகளுக்கு வேலிகள் அமைத்துத் தர வேண்டும் என்று முதல்வர் விஜயிடம் மனு கொடுத்திருந்தேன்.
என்னுடைய கோரிக்கையை ஏற்று உடனே தீர்வு தந்த முதலமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினரின் கோரிக்கைக்கு உடனடியாகச் செவிசாய்த்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சரின் இந்தச் செயல் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.