இடைத்தேர்தலில் நிலவும் ஐந்து முனைப் போட்டி குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகவும் அதிரடியாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.
அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி இன்றைக்குத் தமிழ்நாட்டில் மிகவும் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நேரடியாகத் தங்களின் வாக்குகளை அளிக்கவில்லை.
மக்கள் வாக்களித்தது விஜய்க்கு மட்டும்தான். தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) மட்டும்தான் தங்களுக்கான மக்கள் ஆதரவு உறுதியாக இருக்கிறது என்று தைரியமாகச் சொல்ல முடியும். கூட்டணியில் உள்ள மற்ற அமைப்புகள் அனைத்தும் திமுகவின் தொடர் முயற்சியாலும் தயவாலும் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்.
திமுகவின் பலத்தைப் பயன்படுத்தி இந்த பக்கம் வந்துவிட்டார்கள், அவ்வளவுதான். அதை வைத்துக்கொண்டு இங்கு வந்து வீர வசனம் பேசுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை, அதனால் அனைவரும் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது” என்று காரசாரமாகச் சாடினார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த அதிரடி விமர்சனம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.