2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், பாஜாகவில் இருந்து விலகி ‘We, The Leaders’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை, டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அரசு நிர்வாகத்திற்கு முற்றிலும் புதியவராக இருக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கு நாம் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “விஜய்க்கு ஒரு வருடம் வரை கால அவகாசம் கொடுங்கள். அவர் ஆட்சி நிர்வாகத்திற்குப் புதியவர் என்பதால், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவருக்குக் கண்டிப்பாக அவகாசம் தேவை. நாம் அவருக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கலாமே தவிர, அவர் சுதந்திரமாக ஆட்சி செய்ய நாம் உரிய இடத்தை வழங்க வேண்டும்” என்று மிகவும் முற்போக்காகத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த அசாத்திய அரசியல் எழுச்சி மற்றும் தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக மக்களிடம் இருந்த கடுமையான அதிருப்தி அலைதான் (Anti-incumbency) விஜய்யின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தது என்றார். “திமுக அரசுக்கு எதிரான தரைமட்ட வேலைகள் ஏற்கனவே மக்களிடம் கட்டமைக்கப்பட்டிருந்தன. தேர்தலில் விஜய் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் இந்த அளவிற்கு மிகப்பெரிய வாக்கு வங்கியை அவர் பெறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கடைசி நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக உருவான மாபெரும் அலைதான் அவரது அசாத்திய வெற்றிக்குத் தீர்க்கமான ஒன்றாக அமைந்தது” என்று தேர்தல் கள நிலவரத்தை விவரித்துள்ளார்.
அரசியல் மாற்றமும் சவால்களும்:
விஜய்யின் இந்த அரசியல் வருகை தன்னுடைய முடிவுகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறிய அண்ணாமலை, புதியவர்கள் அரசியலுக்கு வருவதை தான் எப்போதும் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “பணம் மற்றும் சாதிச் சமன்பாடுகளால் முடங்கிக் கிடக்கும் சில அரசியல் தடைகளை உடைத்தெறிய, சில நேரங்களில் ஒரு வலுவான சினிமா பின்புலமும் மாஸ் ஈர்ப்பும் கொண்ட ‘கல்ட்’ (Cult) தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்; அதனை விஜய்யும் அவரது தமிழக வெற்றி கழகமும் (TVK) சாதித்துக் காட்டியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், வெறும் சினிமா கவர்ச்சி மட்டுமே அரசியலை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்லாது. தமிழகத்திற்குத் தற்போது கொள்கை சார்ந்த, சான்றுகள் அடிப்படையிலான (Evidence-based) சிறந்த ஆளுமைகள் தான் தேவை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு விஜய்க்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்கள், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் திடீரென அவருடன் கைகோர்ப்பது போன்ற தற்போதைய அரசியல் நகர்வுகள் ஜனநாயகப் பண்புகளைக் கெடுப்பதாக அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய சுயநலப் போக்குகளால் தேவையற்ற இடைத்தேர்தல்கள் (By-elections) திணிக்கப்படுவதாகவும், இடைத்தேர்தல்கள் என்பது தலைவர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல, அது சிலரது மர்மமான அரசியல் பேரங்களின் வெளிப்பாடு என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தங்களது புதிய இயக்கம் குறித்துப் பேசிய அவர், ஒரு இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவது என்பது ஒரு நீண்ட நெடிய செயல்முறை என்றும், தற்போது தங்களது இயக்கத்தில் சுமார் 19 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும்போது முறையான அரசியல் உரையாடலைத் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாங்கள் டிவிேக (TVK) மற்றும் விஜய்யின் அரசியல் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் என்றும், தரம் தாழ்ந்த அரசியல் கலாச்சாரத்திற்குத் தாங்கள் முழுமையாக எதிரானவர்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இறுதியாக, ஒருவேளை இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக-டிவிகே கூட்டணி அமைந்திருந்தால், அந்த கணக்கு பலிக்காமல் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வந்திருக்கும் என்றும், இந்தத் தேர்தல் என்பது வெறும் எண்களின் கூட்டல் (Arithmetic) அல்ல, மாறாக மக்களுடனான கெமிஸ்ட்ரி (Chemistry) என்பதை நிரூபித்துள்ளது என்றும் தனது பேட்டியை நிறைவு செய்துள்ளார்.