தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வனப்பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புலிகள் காப்பகத்தைப் பாதுகாப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்குப் பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தமிழக அரசின் முக்கியக் கடமையாகும் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் பாஜக தலைவருமான அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக ரீதியிலான ஆக்கிரமிப்பாளர்களையும், பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது நீதியல்ல என்று குறிப்பிட்டுள்ளார். வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறிப்பதற்குப் பதிலாக, மாற்று குடியிருப்பு, மாற்று வாழ்வாதார வழிவகைகள் மற்றும் போதிய கால அவகாசத்தை மனிதாபிமான அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டத்தின் ஆட்சியையும் வனவிலங்கு பாதுகாப்பையும் உறுதி செய்யும் அதே வேளையில், எளிய கிராம மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் நிரந்தரத் தீர்வைத் தமிழக அரசு உடனே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தென் மாவட்ட மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.