விஜய்யை பார்த்தது கூட இல்லை… ஆனா நீதிக்கு குரல் கொடுத்தேன்! – அண்ணாமலை அதிரடி பேட்டி!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் “வி தி லீடர்ஸ்” (We The Leaders) அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தமது புதிய அரசியல் பயணம் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய அண்ணாமலை, “எனக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் அவரை இதுவரை நேரில் பார்த்தது கூட கிடையாது. அவரோடு கைக்குலுக்கியதோ அல்லது ‘வணக்கம்’ என்று வாழ்த்துத் தெரிவித்ததோ கூட இல்லை. ஆனால், தேர்தலுக்கு முன்பாக டிவிேக கட்சிக்கு திமுக நெருக்கடி கொடுத்தபோது, நான் அவர்களுக்காகக் குரல் கொடுத்தேன். சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டு, அநீதிக்கு எதிராக நீதிக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நான் குரல் கொடுத்தேன்” என்று தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து தமது அமைப்பின் கொள்கை குறித்து விளக்கிய அவர், “டிவிகே கட்சி ஏதேனும் நல்ல காரியம் செய்தால் அதைச் சரி என்று சொல்வோம்; அவர்கள் தவறான பாதைக்குச் சென்றால் தவறு என்றும் சுட்டிக்காட்டுவோம். என்னோடு பயணிக்கும் 21 லட்சம் மக்களிடமும் இந்த அடிப்படைப் புரிதல் இருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில், இந்த இயக்கம் விரைவில் ஒரு முழுமையான அரசியல் கட்சியாக உருவெடுக்கப் போகிறது” என்று கூறினார்.

மேலும், “ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்களும் பார்வைகளும் இருக்கத்தான் செய்யும். திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட மனிதர்களும், வெவ்வேறு பின்புலம் உள்ளவர்களும் தற்போது ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைந்து வருகிறார்கள்” என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

விஜய் குறித்தும், தமது அமைப்பின் அரசியல் நுழைவு குறித்தும் அண்ணாமலை வெளிப்படையாகப் பேசியுள்ள இந்தப் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment