“ட்ரோல் பயத்தால் பேட்டி தவிர்ப்பு!”: ஊடகங்களைச் சந்திப்பதில்லை ஏன் எனப் பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் விளக்கம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் என்.ஆனந்த், தவெக அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதைத் தவிர்ப்பதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அவையில் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களின் போக்கைச் சுட்டிக்காட்டித் தனது விளக்கத்தை முன்வைத்தார்.

செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் அடக்குமுறையாகவும் மடக்குமுறையாகவும் எடக்குமுடக்கமாகக் கேள்விகளைக் கேட்டு, தங்களின் கருத்துக்களைத் தவறாகச் சித்தரித்து ட்ரோல் செய்ய முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாகவே தாங்கள் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதில்லை என்றும், வீண் சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்க்க விரும்புவதாகவும் அமைச்சர் என்.ஆனந்த் சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசிய அவர், முதலமைச்சரின் திட்டவட்டமான அறிவுறுத்தலின்படி, ஊடகங்களில் தோன்றி வீண் பேச்சுக்களைப் பேசுவதைத் முழுமையாகத் தவிர்த்து, மக்களின் நலன் சார்ந்த பணிகளில் மட்டுமே தங்களது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

விளம்பர அரசியல் மற்றும் ட்ரோல்களுக்கு இடம் தராமல், மக்கள் பணியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அவர் கூறியது சட்டமன்றத்திலும் அரசியல் தளங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Comment