ஒரே மேடையில் ராணா டகுபதி மற்றும் பிரபாஸ் கொடுத்த சிக்னல்.. ‘பாகுபலி 3’ மீண்டும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு உச்சம்!
இந்திய திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக ‘பாகுபலி’ தொடர் கருதப்படுகிறது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த இரண்டு பாகங்களும் இந்திய சினிமாவின் வசூல் சாதனைகளை மாற்றியமைத்தன. தற்போது ‘பாகுபலி 3’ உருவாகுமா என்ற கேள்வி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ராணா டகுபதி, “உலகம் இன்னும் அதற்கு தயாராக இருக்காது.. ஆனால் பாகுபலி இருக்கும்” என்று கூறியதுதான் இந்த விவாதத்திற்கு தொடக்கமாக அமைந்தது. அவரது இந்த மர்மமான பதில் ரசிகர்களிடையே பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது.
இதற்கிடையில் அதே மேடையில் இருந்த நடிகர் பிரபாஸ், எந்த விளக்கமும் அளிக்காமல் தனது கையில் மூன்று விரல்களை காட்டி புன்னகைத்தார். அந்த ஒரு சைகை சமூக வலைதளங்களில் வைரலாகி, ‘பாகுபலி 3’ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் உருவாக்கியுள்ளது.
இருப்பினும், ‘பாகுபலி 3’ குறித்து தயாரிப்பு நிறுவனம் அல்லது இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், நடிகர்களின் சைகைகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகவே பார்க்கப்படுகின்றன.
‘பாகுபலி’ என்ற பெயரே இந்திய சினிமாவில் ஒரு பிராண்டாக மாறியுள்ள நிலையில், 3வது பாகம் உருவானால் அது மீண்டும் உலகளவில் மிகப்பெரிய கவனத்தை பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர். ராணாவின் பேச்சும், பிரபாஸின் சிரிப்பும் தற்போது ‘பாகுபலி 3’ பற்றிய விவாதத்தை மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கியுள்ளது.