மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு – இடைக்காலத் தடை கோரிய மனு மீது நாளை விசாரணை!

தமிழக அரசு அறிவித்துச் செயல்படுத்தி வரும் ‘மகளிர் வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் காரணமாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களின் தொழிலைக் கைவிட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, போக்குவரத்து மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தால் தனியார் பேருந்துகளில் பெண் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுத் தொழில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த மனுவில், அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரான செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை கோரிய இந்த மனு மீதான விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளது. அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு அளிக்கப்பட்டு வரும் இந்தச் சலுகை திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது, அரசு நிர்வாகம் மற்றும் பேருந்துப் பயணிகள் இடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment