இந்தியாவில் இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் (NGO) எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதியாகக் சரிவடைந்துள்ளதாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கை வாயிலாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, நாட்டில் 29 ஆயிரமாக இருந்த தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்து 14 ஆயிரமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறை மீறல்களுக்கான ரத்து நடவடிக்கைகள் மற்றும் தணிக்கைக் கெடுபிடிகள் காரணமாகவே பல நிறுவனங்கள் தங்களது உரிமைகளை இழந்துள்ளதே இந்த திடீர் வீழ்ச்சிக்கு முதன்மை காரணியாகக் கருதப்படுகிறது.
ஆனால், அதே வேளையில் இயக்கத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தபோதிலும், அவை பெறும் வெளிநாட்டு நிதி வரத்து இமாலய அளவில் உயர்ந்து ₹22,974 கோடியை எட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எண்ணிக்கையில் குறைந்தாலும் நிதிப் பாய்ச்சல் பல மடங்கு அதிகரித்திருப்பது, தொண்டு நிறுவனங்கள் மீதான மத்திய அரசின் தீவிரக் கண்காணிப்பையும், நிதிப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நிருவாக நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது.
சர்வதேச அளவில் இருந்து வரும் நிதியின் நம்பகத்தன்மை மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த கோணங்களில் மத்திய அரசு இந்த மாற்றங்களை அணுகி வரும் சூழலில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புள்ளிவிவரங்கள் தேசிய அளவில் முக்கிய விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளன.