சென்னை விமான நிலையத்தின் மோசமான பராமரிப்பு மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, அதன் நிருவாகத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து (AAI) நீக்கித் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் எழுதிய ரகசிய கடிதம் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு அளவில் போக்குவரத்து மையமாகத் திகழும் சென்னை விமான நிலையத்தில் போதிய பராமரிப்பின்மை, கூரை இடிந்து விழுதல் மற்றும் நிருவாகச் சீர்கேடுகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் சூழலில், அதனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் தனியார் துறைப் பங்களிப்பைக் கோரி முதலமைச்சர் இக்கடிதத்தை எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிருவாகக் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, பொதுத் துறை அமைப்புகளின் சேவைகளில் உள்ள தொய்வை வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில் ஆளும்கட்சியின் இந்த நகர்வு அமைந்துள்ளது.
அதேவேளையில், மாநிலத்தின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கக் கோரும் முதலமைச்சரின் அணுகுமுறை கொள்கை ரீதியாக எந்தளவுக்குச் சரியானது என்ற விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது. விமான நிலையச் சேவைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஒருபுறம் இருந்தாலும், பொதுத் துறை நிறுவனங்களின் சீரமைப்பை விடுத்துத் தனியார்மயத்தை மட்டுமே தீர்வாக முன்வைப்பது ஊழியர்களின் நலன் மற்றும் எளிய பயணிகளின் கட்டணச் சுமை குறித்த அச்சத்தை உருவாக்குகிறது.
பிரதமருக்கு எழுதப்பட்ட இந்த ரகசிய கடிதம் வெளியானதன் மூலம், மத்திய-மாநில அரசு உறவுகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு நிருவாகத்தில் தவெக அரசின் கொள்கை நிலைப்பாடு குறித்த புதிய அரசியல் சர்ச்சையும் வெடித்துள்ளது.