தமிழ்நாடு அரசின் நலத்திட்ட அளவுகோல்கள் மற்றும் சலுகைகள் வழங்கும் முறை குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைத்தளப் பதிவில் மிகக் கடுமையான விமர்சனத்தையும் சாடலையும் முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்புமனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவதில் எவ்வித வருமான உச்ச வரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே வேளையில், “மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான (LPG Cylinder) தொகையைப் பெறத் தகுதியில்லை என்ற நிலை நிலவுகிறது” என்று ஒப்பீடு செய்து, “சூப்பரான மாற்றம்ல!” என எள்ளல் நடையில் சாடியுள்ளார்.
கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்களுக்குச் சலுகை வழங்கும் போது இல்லாத வருமான வரம்பு, சாமானிய மக்களின் இலவச கேஸ் திட்டத்திற்கு மட்டும் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி இடும்பாவனம் கார்த்திக் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், இணையதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.