“பெண்களின் ஓட்டுகளை வாங்க தவறான முடிவு!”: மகளிர் இலவசப் பேருந்து பயணம் பற்றி புளூ சட்டை மாறன் சாடல்!

தமிழக அரசியல் களத்தில் மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா விமர்சகரும் கருத்துரையாளருமான புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த நடவடிக்கை குறித்துத் தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள புளூ சட்டை மாறன், “பெண்களின் ஓட்டுகளைக் கணர்வதற்காக விஜய் எடுத்திருப்பது மிகவும் தவறான முடிவாகும்” என்று நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய அவர், “டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் அதிகப் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துப் பயணிக்கும் ஆண்கள், இனி அமரக்கூட இடமின்றி நின்றுகொண்டே பல கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் ஆண் பயணிகளின் வசதிகள் மற்றும் அவர்களின் சிரமங்களைப் புறக்கணித்துவிட்டு, அரசியல் லாபத்திற்காக இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார். புளூ சட்டை மாறனின் இந்த அதிரடி விமர்சனம், பேருந்துப் பயணிகளின் பொதுவான நலன் மற்றும் இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாகி, சூடான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment