“லண்டன் போட்டோக்கள் வேறு கதை சொல்கிறது!”: முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை கடுமையாக விமரிசித்த எடப்பாடி பழனிசாமி!

முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் கார் பந்தய நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் முற்றிலும் வேறு கதையைக் கூறுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் லண்டன் சென்றுள்ளதாக அனைவரும் எதிர்பார்த்த வேளையில், பத்திரிகைகளில் வெளியாகும் புகைப்படங்கள் வேறு மாதிரியாக உள்ளதாக விமர்சித்தார்.

இதுவரை எந்தவொரு தொழில் முதலீட்டாளர்களுடனும் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவோ அல்லது முதலீடுகளை ஈர்த்ததாகவோ உறுதியான தகவல்களோ, புகைப்படங்களோ வெளியாகவில்லை என்றும்; மாறாகச் சில குறிப்பிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்களே வெளிவந்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிவிட்டு இதுபோன்று செயல்படுவது பொதுமக்களை ஏமாற்றும் செயல் எனச் சாடிய அவர், ஆளுங்கட்சியின் இத்தகைய போக்கை பொதுமக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment