பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் முடிவைக் கைவிடக் கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முதலமைச்சர் விஜய்க்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய அவர், “மிஸ்டர் விஜய் சார்! உங்களுக்கு வாக்களித்தது வெறும் 34 சதவீதம் பேர் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. இடதுசாரிகள் உள்ளிட்ட மாற்று எதிர்க்கட்சிகளின் ஆதரவால்தான் உங்கள் அரசாங்கம் நீடித்துக் கொண்டிருக்கிறது” என காரசாரமாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், கூட்டணிச் தோழமைகளையும் பிற கட்சிகளையும் மதிக்காமல் தன்னிச்சையாகவும் தங்கள் இஷ்டத்திற்கும் தொடர்ந்து செயல்பட்டால், அரசுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்து வேறு விதமான முடிவை நோக்கி நாங்கள் செல்ல நேரிடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
சென்னையின் சுனாமி பாதிப்புக்குள்ளான பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் சூழலியல் ரீதியாகவும் பொதுமக்கள் நலன் சார்ந்தும் தவறானது என சுட்டிக்காட்டி தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவரான சிபிஎம் சண்முகத்தின் இந்த அதிரடி அரசியல் மிரட்டல், ஆளும் தவெக அரசுக்கு எதிர்பாராத பெரும் அரசியல் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மை குறைவு மற்றும் கூட்டணி ஆதரவை நம்பியிருக்கும் சூழலில், இடதுசாரிகளின் இந்த வெளிப்படையான எச்சரிக்கை தமிழக அரசியலில் தவெக அரசின் நிலைத்தன்மை குறித்த புதிய விவாதங்களையும் சலசலப்பையும் கிளப்பியுள்ளது.