சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும், இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், குற்றவாளியின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தைப் பார்க்காமல் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதை கனிமொழியின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சிறுமி மீதான கொடூரமான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, எந்தவித அரசியல் அல்லது அதிகாரச் செல்வாக்கிற்கும் இடம் தராமல் காவலத்துறை நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சமூகத்தில் போற்றப்படும் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடும் போது, அவர்களுக்குக் சட்டத்தின் பிடியிலிருந்து விலக்கு அளிக்க முயற்சிப்பது குற்றவாளிகளுக்கு மேலும் துணிச்சலையே தரும். ஆளும் தவெக அரசின் காவல்துறை நிருவாகம் இத்தகைய உணர்வுப்பூர்வமான வழக்குகளில் எவ்வித தயக்கமும் இன்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தருவதும், குற்றப் பின்னணியில் உள்ள செல்வாக்குமிக்க நபா்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுமே சமூகப் பாதுகாப்பிற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் உண்மையான சான்றாக அமையும்.