“கொளத்தூரில் வென்றது நான் தான்!”: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்தத் தேர்தல் மனுவில், கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுகளில் (VVPAT) பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 6 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுகளுக்கு இடையே கடுமையான முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வாக்குப்பதிவின் போது பல்வேறு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) மென்பொருள் கோளாறுகள் (Software Glitches) ஏற்பட்டுள்ளதையும் தனது மனுவில் அவர் விரிவாக விவரித்துள்ளார்.

எனவே, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் (VVPAT) சீட்டுகளையும் முழுமையாக மீண்டும் சரிபார்க்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள் மற்றும் முறைகேடுகளைக் களைந்து முறையாக ஆராய்ந்தால், “கொளத்தூர் தொகுதியில் நான் தான் வெற்றி பெற்றுள்ளேன்” என்பதை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனுவில் உறுதியாக வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்தத் தேர்தல் வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Comment