“தவெக ஆட்சி வந்ததும்..”: பாதுகாப்பு மறுப்பு & பிரதமர் பதவி மோதல் – தவெக கூட்டணியை விமர்சித்து டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு தனக்கு வழங்கி வந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கடந்த 30 ஆண்டுகளாக எனக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு, தவெக ஆட்சி அமைந்ததும் எனக்கு வழங்கப்படவில்லை” எனக் வேதனை தெரிவித்தார்.

மேலும் தவெக கூட்டணியின் அரசியல் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒருபுறம் முதலமைச்சர் விஜயைப் பிரதமர் எனத் தவெகவினரும், மறுபுறம் ராகுல் காந்தியைப் பிரதமர் எனக் காங்கிரஸாரும் கூறி வருகின்றனர். இதனால் தவெக கூட்டணி என்பது முற்றிலும் முரண்பட்ட ஒரு கூட்டணியாக உருவெடுத்துள்ளது” என்று கடுமையாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் முதலில் தனது 5 ஆண்டு கால ஆட்சியைச் சிறப்பாக நடத்தி முடிக்க முயற்சி செய்ய வேண்டும்; அதைவிட்டுவிட்டுத் தேசிய தலைவர் என்பதெல்லாம் பிறகு வரட்டும்” என்றும் அட்வைஸ் தொனியில் விமர்சித்துள்ளார்.

தவெக ஆட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் முரண்பாடுகள் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி முன்வைத்துள்ள இந்த விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment