தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெம் வீரமணி வழக்குத் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தவும், வழக்கு சார்ந்த கூடுதல் ஆதாரங்களைத் திரட்டவும் சென்னை மாநகரக் காவல் துறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில்தான், இவ்வழக்கு குறித்துப் பொதுமக்களிடம் இருந்து முக்கியமான தகவல்களையும் ஆதாரங்களையும் பெறுவதற்காகச் சிறப்புப் புகார் எண் ஒன்றைச் சென்னை காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), இந்த விசாரணையைத் தீவிரமாகக் கையாண்டு வருகிறது.
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல்களோ, ஆவணங்களோ அல்லது முக்கிய ஆதாரங்களோ வைத்திருக்கும் பொதுமக்கள், காவல்துறைக்குத் தெரிவிக்க நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 9345319676 என்ற பிரத்யேகத் தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் நேரடியாக அழைத்துப் பேசலாம் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) செயலி வாயிலாகவும் தங்களிடம் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் குறுஞ்செய்தியாகவோ கோப்புகளாகவோ அனுப்பி வைக்கலாம் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கு விசாரணை அடுத்தகட்டத்தை எட்டியுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் தெரிந்த நபர்கள் அளிக்கும் தகவல்கள் விசாரணைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல் துறையின் இந்த அதிரடி அறிவிப்பு, வழக்கில் உண்மைகளை விரைவாகக் கொண்டுவர உதவும் என நம்பப்படுகிறது.