இந்தியாவிலேயே முதன்முறையாக: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமெரிக்க நிறுவனமான வால்கிரீன்ஸ் வரலாற்று ஒப்பந்தம்!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச முன்னணி சுகாதார மற்றும் மருந்தகச் சேவை நிறுவனமான வால்கிரீன்ஸ் (Walgreens), தமிழ்நாட்டில் தனது மையத்தை அமைப்பதற்காக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக உலகளாவிய திறன் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையத்தை அமைக்க இந்த நிறுவனம் சென்னையைத் தேர்வு செய்துள்ளது. தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட OMR GCC வழித்தடத்தில் உள்ள தரமணி DLF DOWNTOWN வளாகத்தில் இந்த பிரம்மாண்ட மையம் அமையவுள்ளது.

இதன் மூலம் சுமார் 250 உயர்மதிப்பு வாய்ந்த உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் சுகாதாரம் மற்றும் மருந்தகத் துறையில் தடம் பதித்துள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம், தனது திறன்பட சேவை மையத்திற்குத் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்திருப்பது, மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் மனிதவள ஆற்றலுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், OMR போன்ற தகவல் தொழில்நுட்ப மண்டலங்களை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதிலும் தவெக அரசு காட்டி வரும் முனைப்பு இத்தகைய உயர்மதிப்பு ஒப்பந்தங்கள் மூலம் வெளிப்படுகிறது. சென்னை சர்வதேச தொழில்நுட்ப வரைபடத்தில் மேலும் ஒரு படி உயர்ந்துள்ள நிலையில், தவெக அரசின் பொருளாதார தொலைநோக்குப் பார்வைக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளது.

Leave a Comment