“3-வதாவதாகப் பாடுவது அவமானம் அல்ல”: தமிழ்த்தாய் வாழ்த்து வரிசை குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசை குறித்து எழும் விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாகப் பாடப்பட்ட நிலை குறித்துப் பேசிய அவர், “சொந்த நாட்டையும் பெற்ற தாயையும் யாரும் வேண்டுமென்றே அவமானப்படுத்த மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டார். மேலும், அதிகாரப்பூர்வ அல்லது பல்கலைக்கழக நடைமுறைகளின்படி தமிழ்த்தாய் வாழ்த்தை வரிசையில் மூன்றாவதாகப் பாடுவதை எந்த வகையிலும் தாய்மொழியை அவமதிப்பாகவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் தெளிவுபடத் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெருமளவில் பங்கேற்ற சூழலில், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்வைத்த இந்த விளக்கம் தற்போதைய அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. தாய்மொழி மீதான மரியாதையும், தேசிய நெறிமுறைகளும் ஒன்றோடொன்று முரண்படாத வகையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற அவரது கருத்து குறித்துச் சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

Leave a Comment