தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனு அனுப்பியுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் என்பவர் ஆணையத்தின் பிற உறுப்பினர்களான தேர்தல் ஆணையர்களைப் புறக்கணித்துவிட்டுத் தனிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும், கூட்டுப் பொறுப்புடன் இயங்குவதே உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் வழிகாட்டுதல் என்றும் தனது கடிதத்தில் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், அமைப்பின் உயர்பதவியில் உள்ளவருக்கு எதிராகவே இத்தகைய சட்ட ரீதியான நகர்வு மேற்கொள்ளப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டிய அரசமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தலைவரே விதிகளை மீறிச் செயல்படுவதாக வழக்குரைஞர் தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, தேர்தல் அமைப்பின் மீதான மக்கள் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பிற ஆணையர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்வது என்பது, அதிகார வர்க்கத்தின் மேலாதிக்கத்தையே காட்டுகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையர் தேர்வு விவகாரம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சாசன அமர்வின் பரிசீலனையில் உள்ள சூழலில், தலைமை தேர்தல் ஆணையரின் இந்த அத்துமீறிய நிருவாக நடவடிக்கை தொடர்பான புகார் சட்ட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அட்டர்னி ஜெனரல் இந்த மனுவின் மீது அளிக்கும் அனுமதியின் அடிப்படையிலேயே, தேர்தல் ஆணையத்தின் உள்நிருவாக அதிகார நடைமுறைகள் நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுமா என்பது தீர்மானிக்கப்படும்.