தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் முதல் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மாநாட்டில் உரையாற்றிய அவர், வரும் 2036-க்குள் மாநிலப் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்தும் வகையில் மிக பிரம்மாண்டமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சீரான தொழில்துறை வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமே இந்த இலக்கை எட்ட முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர், “வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் யாரும் தங்களது சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ செல்லக் கூடாது என்பதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கம்” என்று உறுதியோடு வலியுறுத்தினார்.
கிராமப்புற மற்றும் சிறிய நகரப்புற இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாநிலம் முழுவதுமான பொருளாதாரச் சமநிலையை அடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
த.வெ.க அரசின் முதல் முதலீட்டாளர் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முன்வைத்துள்ள இந்த இலக்குகளும், சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு என்ற தொலைநோக்குப் பார்வையும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.