தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியின் மோசமான சாலை நிலவரம் குறித்துப் பேரவையில் முக்கிய விளக்கத்தை முன்வைத்துள்ளார்.
அப்பகுதியில் நிலவிய மோசமான சாலையைத் தவெக தலைவர் தனது சொந்தச் செலவிலேயே சீரமைத்துக் கொடுக்கக் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் தனது உரையின் போது சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி சார்பில் சொந்த நிதியில் சீரமைப்பதைப் காட்டிலும், அரசு நிர்வாகம் மூலமாகவே அதனை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதன்படி தவெக அரசுப் பொறுப்பேற்ற 5-வது நாளிலேயே, தாண்டிக்குடி சாலைச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி உடனடியாக ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது அப்பகுதியில் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் அவையில் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கேள்விக்கு மிகத் தெளிவான ஆதாரங்களுடன் அமைச்சர் என்.ஆனந்த் அளித்த இந்தப் பதில், சட்டமன்றப் பேரவையில் பெரும் கவனத்தைப் பெற்றது. மக்கள் சார்ந்த அத்தியாவசியப் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளில் அரசு காட்டி வரும் உடனடி வேகத்தையும் தீவிரத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த அமைச்சரின் இந்த உரை, தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.