“சீட் கொடுத்திருக்கக் கூடாது!”: தவெக வேட்பாளர் தேர்வு குறித்து எம்பி கார்த்திக் சிதம்பரம்!

தாராபுரம் இடைத்தேர்தலில் ஆளும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்து எனது கருத்து முற்றிலும் வேறுபட்டது என்றும், ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதனை நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்; தவெகவிற்குப் புதிதாகக் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.

தற்சமயம் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களையும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு 5 ஆண்டுகள் தாராளமாக ஆட்சியை நடத்த முடியும். இந்த இடைத்தேர்தலில் ஆரம்பம் முதல் தவெக கட்சியில் உண்மையமையாக உழைத்தவர்களுக்கே வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்” என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், தவெகவின் வேட்பாளர் தேர்வு குறித்துக் தோழமைக் கட்சியின் முக்கியப் பிரமுகரான கார்த்திக் சிதம்பரமே பகிரங்கமாக விமர்சித்திருப்பது ஆளும் கூட்டணிக்குள் நிலவும் உட்கட்சி மற்றும் கூட்டணிக் முரண்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

கட்சி தாவியவர்களுக்கும் மாற்று முகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, கட்சியின் உண்மையான உழைப்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவெக தொண்டர்கள் மத்தியிலும் ஏற்கனவே புகையத் தொடங்கியிருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள கார்த்திக் சிதம்பரத்தின் இந்தப் பேச்சு, ஆளும்கட்சியின் நிருவாக முடிவுகளையும் தேர்தல் வியூகங்களையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வெறும் அரசியல் கணக்குகளுக்காக கொள்கைப் பிடிப்பை விட்டுக்கொடுத்து வேட்பாளர்களை நிறுத்துவது, கட்சி அமைப்பின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதோடு, இடைத்தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

Leave a Comment