சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கின் தற்போதைய நிலை, தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் அன்றாட வழக்கைப் பட்டியல் உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் மிகவும் எளிதாகத் தெரிந்து கொள்ளும் வகையில் ‘என்ஜிடி’ (National Green Tribunal) மொபைல் செயலியைப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நிர்வாகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணையின் கட்டங்கள், தீர்ப்புகளின் நகல்கள் மற்றும் வழக்கு அட்டவணைகள் ஆகியவற்றை நேரடியாகத் தனது கைபேசி மூலமாகவே எந்தவித சிரமமுமின்றிப் பொதுமக்கள் அறிந்து கொள்ள இச்செயலி வழிவகை செய்கிறது.
இதன் மூலம் நீதிமன்ற நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்பதோடு, வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்களும் மனுதாரர்களும் நேரடியாக நேரில் வந்து தகவல்களைத் திரட்டும் கால விரயமும் வெகுவாகக் குறையும் எனக் கருதப்படுகிறது.
நீதித்துறையைச் சாதாரண மக்களுக்கும் விரைவாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கும் மத்திய அரசின் டிஜிட்டல் சேவைகள் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இப்புதிய செயலி அறிமுகம் குறித்து வழக்கறிஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது