குறையும் புற்றுநோய் மருந்துகளின் விலை: 70% வரை விலை குறைய வாய்ப்பு – உச்சநீதிமன்றக் கண்டனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எதிர்கொள்ளும் கடுமையான நிதிப் சுமையைக் குறைக்கும் வகையில், புற்றுநோய் மருந்துகளின் விலையைக் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில்லறை விற்பனையாளர்களுக்குக் குறைந்த விலைக்கு வழங்கப்படும் மருந்துகள், நோயாளிகளுக்குப் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த காரசாரமான கண்டனத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.2,700-க்குக் கிடைக்கும் புற்றுநோய் மருந்துகள், சாமானிய நோயாளிகளுக்கு 10 மடங்குக்கும் அதிகமான லாப வரம்பில் விற்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்வது படுகொலைக்குச் சமம்” என்று தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி விமர்சனத்தைத் தொடர்ந்து, விழித்துக்கொண்ட மத்திய அரசு புற்றுநோய் மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பை 30% ஆகக் குறைக்க முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக, புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) 70% வரை விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.

இந்த வழக்கு விரைவில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மத்திய அரசு இத்தகையக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மருந்துகளின் விலை பெருமளவில் குறையவுள்ளதால், புற்றுநோயாளிகளின் மாதாந்திர மருத்துவச் செலவு கணிசமாகக் குறையும் என்றும், இது பல்லாயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment