சர்வதேசக் கால்பந்து களத்தில் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து உலகின் தலைசிறந்த வீரராகக் கொண்டாடப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஓய்வு குறித்த மறைமுகக் குறிப்பை வெளிப்படுத்தி விளையாட்டு உலகை அதிர வைத்துள்ளார். பிரபல ‘வோக்’ (Vogue) இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தொழில்முறைப் போட்டிகளில் விளையாடுவதற்கு இதுவே தனது கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
களத்தில் இருந்து விடைபெறும் தருணத்தில், எதிர்கால தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஒரு மகத்தான சாதனைகள் நிறைந்த வரலாற்றை விட்டுச் செல்ல விரும்புவதாகவும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாகக் உலகக் கால்பந்து அரங்கில் தவிர்க்க முடியாத நாயகனாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் உத்வேகமாகவும் விளங்கி வரும் ரொனால்டோவின் இந்த ஓய்வு குறித்த பேச்சு, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிளப் போட்டிகள் மற்றும் போர்த்துகீசிய தேசிய அணிக்காக எண்ணற்ற கோல்களையும் கோப்பைகளையும் குவித்துள்ள அவரது இந்த முடிவு, ஒரு பொற்காலத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.
அவரது விளையாட்டு வாழ்க்கையின் கடைசிப் போட்டிகளை நேரில் காணவும், களத்தில் அவரது அற்புத ஆற்றலை இறுதியாகக் ரசிக்கவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தொழில்முறை கால்பந்தாட்டத்தில் இருந்து விலகும் அவரது காலம் நெருங்கிவிட்டது போன்ற இந்த அறிவிப்பு, விளையாட்டு வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.