ரூ.2,000 கோடி முதலீட்டிற்கு ரூ.200 கோடி லஞ்சம்! – தலை சுற்றி ஆந்திரா சென்றதாகச் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடிப் பேச்சு!

தமிழகத்திற்கு வர வேண்டிய பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் சட்டப்பேரவைச் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியுள்ள தகவல், அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். “எனது நெருங்கிய நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். ‘நான் சொன்னால் காரியம் நடக்கும்’ என்று நம்பி, அவரை இங்குள்ள முக்கிய நபர் ஒருவரிடம் அனுப்பி வைத்தேன். அவர் ரூ.2,000 கோடி அளவுக்குப் பெரிய முதலீடு செய்யத் தயாராக வந்தார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பின்னர் அந்த நண்பரிடம் ‘போய்ப் பார்த்தீர்களா? என்ன நடந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அவர்கள் ரூ.200 கோடி லஞ்சம் கேட்டார்கள். அதைக் கேட்டு எனக்குத் தலை சுற்றியது. மொத்தமே அவ்வளவுதான், நான் ஆந்திராவிற்குப் போய்விட்டேன்’ என்றார். இந்த உண்மையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அன்றைய இரவு தூங்கவே இல்லை” என்று மிக உருக்கமாகவும் அதிரடியாகவும் வெளிப்படுத்தினார்.

தமிழகத்திற்கு வர வேண்டிய மிகப்பெரிய முதலீடு லஞ்சக் கோரிக்கையால் கைநழுவி அண்டை மாநிலத்திற்குச் சென்றதாகச் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பகிர்ந்துள்ள இந்தத் தகவல், தற்போதைய அரசியல் சூழலில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன.

Leave a Comment