தமிழக முதல்வர் விஜய் இன்று கூட்ட உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) கூட்டத்தைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் எடுத்த முடிவால் மாநில அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக மற்றும் பாமக ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
இக்கூட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசு நடத்தும் ஒரு ‘அரசியல் நாடகம்’ என திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அக்கூட்டணியில் உள்ள தேமுதிகவின் எல்.கே.சுதீஷும் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
அதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்சமயம் வெளியூர் சென்றிருப்பதால் அவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் உள்ள 57 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் உட்பட) வெறும் 20 உறுப்பினர்கள் மட்டுமே முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மாநிலத்தின் முக்கிய உரிமைகள் மற்றும் நதிகள் இணைப்பு குறித்த விவாதங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படும் நிலையில், பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி இக்கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது தவெக அரசுக்கு பெரும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.