தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய தவெக (TVK) அரசை நிலைகுலையச் செய்ய முயற்சி நடந்ததாகக் கூறப்படும் “ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில்”, திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் தற்போது அதிரடியாக லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Notice) பிறப்பித்துள்ளனர். இதிடீர் நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வழக்கின் முதன்மைக் குற்றச்சாட்டாகக் கருதப்படும் நபர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் மற்றும் எல்லைக் கண்காணிப்புப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை உத்தரவு முறைப்படி அனுப்பப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த அதிரடி சட்ட நடவடிக்கையானது, தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் கரூர் கம்பெனி முக்கியப் புள்ளிகளுக்கு வைக்கப்பட்ட கிடுக்குப்பிடியாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தவெக ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதில் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் என். இளையராஜாவிடம், சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு அவர் மறுத்தபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் சென்னை காவல் ஆணையரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ இளையராஜா அளித்த இந்த பரபரப்பு புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், ஐ.பி.டி.எஸ். (IPDS) என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூரைச் சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 8 பேரை அண்மையில் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபர்களிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையின் போது, அவர்கள் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரது பெயர்கள் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டன. இவர்கள் இருவரின் தூண்டுதலின் பேரிலேயே தவெக எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து குதிரை பேரம் நடத்தப்பட்டது என எஃப்.ஐ.ஆரில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது போலீஸார் தங்களைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை (Anticipatory Bail) கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்தச் சூழலில், போலீஸார் பிறப்பித்துள்ள லுக் அவுட் நோட்டீஸ் மூலம் செந்தில் பாலாஜி தரப்பு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முடியாதவாறு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்த நாட்கள் நீதிமன்றத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.