“கன்னிப் பேச்சு வேண்டாம்!”: சட்டப்பேரவையில் முதல் உரைக்கு புதிய சொல் – பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி விடுத்த வேண்டுகோள்!

தமிழக சட்டமன்றத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் தொகுதியின் கோரிக்கைகளையும் முன்வைத்து உரைநிகழ்த்துவது வழக்கம். குறிப்பாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முதன்முறையாகச் சட்டமன்றத்தில் பேசும் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடும் மரபு நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி இதுகுறித்து ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார். “சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் முதன்முறையாகப் பேசும் உரையை ‘கன்னிப் பேச்சு’ எனக் குறிப்பிட்டுப் பேசுவதற்குப் பதிலாக, ‘முதல் உரை’ அல்லது ‘அறிமுக உரை’ என்கிற பொருத்தமான தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தினால் மிகச் நன்றாக இருக்கும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது இந்த வேண்டுகோளுக்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், அது ஒரு மிகச் சிறந்த மற்றும் நல்ல யோசனை என்று பாராட்டினார். மேலும், இனிவரும் காலங்களில் உறுப்பினர்களின் முதல் உரையை ‘முதல் உரை’ அல்லது ‘அறிமுக உரை’ என்றே பயன்படுத்த வழிமொழிவதாகவும் அவர் உறுதியளித்தார். மரபுரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு சொற்றொடருக்கு மாற்றாக, கண்ணியமான தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தக் கோரிய சௌமியா அன்புமணியின் இந்த ஆக்கப்பூர்வமான முன்மொழிவு சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment