ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது பள்ளி அனுமதி தொடர்பான கருத்துகள் சர்ச்சையான நிலையில் அதற்கு விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். தான் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அரசியல் நோக்கத்திற்காக எதையும் உருவாக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இலவச கல்வி வழங்கும் ‘கலைவாணி கல்வி மையம்’ மூலம் இரண்டு NIOS பள்ளிகளை நடத்தி வருவதாக அவர் கூறினார். குறிப்பாக தேனி பள்ளி தொடர்பாக முந்தைய ஆட்சியில் அனுமதி பெற பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், பணம் கேட்டதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், தென்காசியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு DTCP அனுமதி பெற நீண்ட காலம் காத்திருந்ததாகவும், முந்தைய ஆட்சியில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறினார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு எந்த பணமும் கேட்காமல் அனுமதி விரைவாக வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனுபவத்தையே சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகவும், அதையே தற்போது சிலர் பொய் என விமர்சிப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிகள் கூட எந்த அனுமதிக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்தது மகிழ்ச்சியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை TVK ஆதரவாளர், சங்கி உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களால் தாக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அவை தன்னை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், கிராமப்புற முன்னேற்றத்திற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது நேர்மையை கேள்விக்குட்படுத்துவதற்குப் பதிலாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், தாம் எந்த அழுத்தத்திற்கும் தலைவணங்க மாட்டேன் என்றும் ஸ்ரீதர் வேம்பு தனது நீண்ட பதிவில் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.