“அறிவியல் காரணம் என்ன?”: பரந்தூர் விமான நிலைய திட்டக் கைவிடலுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காட்டமான கேள்வி!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை அரசு கைவிடுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பின்னணியில் உள்ள அறிவியல் பூர்வமான காரணங்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

‘நான் சொல்லிவிட்டேன், அதனால் கைவிடுகிறேன்’ என்று முதலமைச்சர் கூறுவது எந்த வகையில் சரியான அணுகுமுறையாகும் எனக் கேள்வி எழுப்பிய அவர், அப்படிப் பார்த்தால் அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டாரா என்றும் சாடியுள்ளார். வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துத்தான் இத்தகைய முடிவுக்கு வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார் என்றால், அந்த வல்லுநர்களுடன் என்ன பேசப்பட்டது என்ற விவரங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பகிர வேண்டும் என அவர் வலியறுத்தியுள்ளார்.

மேலும் தொடர்ந்த டி.ஆர்.பி.ராஜா, “அவர்கள் உண்மையான வல்லுநர்களாக இருந்திருந்தால், ‘சார், நீங்கள் அப்போது ஆட்சியில் இல்லை; அதனால் சரியான புரிதல் இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டீர்கள்’ என்று முதலமைச்சரிடமே சுட்டிக்காட்டியிருப்பார்கள்” எனக் காரசாரமாக விமர்சித்துள்ளார். அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு குறித்தும், அதற்காக முன்வைக்கப்படும் காரணங்களின் வெளிப்படைத்தன்மை குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதால், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Leave a Comment