தமிழக சட்டமன்றத்தில் தமிழ் மொழியின் பெருமை மற்றும் உணர்வு குறித்துப் பேசிய முதல்வர் விஜய், அவையில் கூடியிருந்த அனைவரையும் கவரும் வகையில் உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை ஆற்றியுள்ளார். உலகளவில் மனித சமூகத் தொடர்பிற்குப் பயன்படும் வெறும் பரிமாற்ற ஊடகமாக மட்டும் மொழியைப் பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், இதில் தமிழ் என்பது வெறும் பேச்சு மொழி மட்டுமல்ல; அது நம் உயிருடன் கலந்த உணர்வு, நம் அடையாளத்தின் வேர் எனக் குறிப்பிட்டார்.
‘தமிழ்’ என்ற சொல்லை உச்சரிக்கும் போதே தாயைப் போன்ற தூய்மையும் புனிதமும் மனதிற்குள் தோன்றுவதாகவும், நமது தாய்மொழியான தமிழ் என்று வந்துவிட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கும் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் என்றாலே அது ஒரு தனி கெத்துதான்; தமிழ் என்றாலே அது ஈடற்ற பவர்!” என்று அழுத்தமாக முழங்கினார். மாநிலத்தின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் எப்போதும் உறுதியுடன் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த அவரது உரை, சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது.
சட்டசபையில் முதல்வர் விஜய் ஆற்றிய இந்த எழுச்சிமிக்க பேச்சு, தற்போது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.