பிரபல முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திராவில் (Tech Mahindra) பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர், நிர்வாகத்தின் மீது பல்வேறு அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிறுவன வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டது சோஷியல் மீடியாவிலும் ஐடி வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால், தான் மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு (Sick Leave) எடுத்ததற்காக, நிர்வாகம் தன்னை அநியாயமாக வேலையை விட்டு நீக்கிவிட்டதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஊழியர், சோதனையான சூழலில் தனக்கு ஆதரவாக நிற்காமல், முறையான விளக்கத்தைக் கூடக் கேட்காமல் திடீரெனப் பணிநீக்கம் செய்த நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தந்திருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்துத் தனக்கு வேலை மற்றும் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அவர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் ஊழியர்கள் சிலர் தன்னைத் தொடர்ச்சியாக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தலுக்கு (Harassment) உள்ளாக்கியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திராவில் பெண் ஊழியர்களுக்கு எவ்வித மரியாதையும் பாதுகாப்பு உணர்வும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
கழிப்பறை செல்லவும் அனுமதி பெற வேண்டும்: ஐடி நிறுவனத்தில் அரங்கேறிய மனித உரிமை மீறல்?
வேலை நேரத்தின் போது ஊழியர்கள் தங்களின் அடிப்படைத் தேவையான கழிப்பறைக்குச் (Washroom) செல்ல வேண்டுமென்றால் கூட, உயர் அதிகாரிகளிடம் கூறிவிட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மிகச் சிறிய காரணங்களுக்காகக் கூடப் பெண் ஊழியர்களைக் கண்காணிப்பதும், நெருக்குதல்களுக்கு ஆளாக்குவதும் அங்கு வாடிக்கையாக நடப்பதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தனக்கு நடந்த இந்த அநீதிக்கு நியாயம் வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவர் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு வழங்கப்படும் வேலைச்சூழல் மற்றும் விடுப்பு உரிமைகள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், மகளின் மருத்துவ அவசர நிலைக்காக விடுப்பு எடுத்த பெண்ணைப் பணிநீக்கம் செய்துள்ள சம்பவம் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.