இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெருவுடையார் கோவில் ராஜகோபுரம் மற்றும் அதன் பிரம்மாண்டமான மதில்கள் முழுவதும், தேசியக் கொடியின் காவி, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய மூவர்ண நிலைகளில் சிறப்பு எல்.இ.டி (LED) மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் இந்த மூவர்ண விளக்குகள் ஒளிரும் போது, ராஜகோபுரம் விண்ணை முட்டும் கம்பீரத்துடன் காட்சியளிப்பதுடன், தஞ்சை மாநகருக்கே ஒரு புதிய பொலிவையும் தேசபக்தி உணர்வையும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அழகிய மின் அலங்காரத்தைக் கண்டு ரசிப்பதற்காகவும், தங்களது குடும்பத்தினருடன் நிழற்படங்கள் மற்றும் ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்வதற்காகவும் ஏராளமான உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோவில் வளாகத்திற்குப் பெருந்திரளாக வருகை தந்து வருகின்றனர்.
வரலாற்றுப் பெருமைமிக்கத் தஞ்சைப் பெரிய கோவில் தேசியக் கொடியின் வண்ணங்களில் மின்னும் இந்தக் கவவர்ச்சியானக் காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு இணையவாசிகளின் பாராட்டைப் பெற்று வருகிறது.